கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.

Update: 2022-10-28 21:03 GMT

திருச்செந்தூர்,

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம்

மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

பலத்த பாதுகாப்பு

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதமிருந்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்