விழுப்புரம்கார் ஷோரூமில் வாடிக்கையாளர்களிடம் ரூ.27 லட்சம் மோசடி3 பேர் கைது
விழுப்புரம் கார் விற்பனை செய்யும் ஷோரூமில் வாடிக்கையாளர்களிடம் ரூ.27 லட்சத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் புதுவண்டிப்பாளையம் முருகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30). இவர் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள கார் விற்பனை ஷோரூம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். விழுப்புரம் கந்தசாமி லே-அவுட் முதல் தெருவில் வசிக்கும் பார்த்தசாரதி(வயது 40) என்பவர் அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து சில மாதங்களுக்கு முன்பு பணியை விட்டு ராஜினாமா செய்தார்.
அவருடன் விற்பனைக்குழு தலைவராக புதுச்சேரி மாநிலம் நெட்டம்பாக்கத்தை சேர்ந்த நரேந்திரன், விற்பனை பிரதிநிதியாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமதுஅசாருதீன் ஆகிய 3 பேரும் பணியாற்றினர்.
இவர்கள் பணிபுரிந்த காலத்தில் கார் வாங்க முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களான சபரிநாதனிடம் ரூ.7 லட்சமும், கோடீஸ்வரனிடம் ரூ.25 ஆயிரமும், தனஞ்செழியனிடம் ரூ.75 ஆயிரமும், மணிமொழியிடம் ரூ.2 லட்சமும், கணேசனிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், வீரவேலிடம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும், பரத்குமாரிடம் ரூ.12 லட்சத்து 35 ஆயிரமும் நிர்வாகத்திற்கு தெரியாமல் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை நிர்வாகத்தில் செலுத்தாமல் கையாடல் செய்தனர்.
ரூ.27 லட்சம் மோசடி
மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து கணினியில் போலியாக ரசீது தயார் செய்து நிறுவனத்தின் முத்திரை வைத்து மேற்கண்ட வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர். அதனைப் பெற்ற வாடிக்கையாளர்கள், கார் வாங்க பலமுறை நிறுவனத்தை அணுகியபோதும் அவர்கள் 3 பேரும் கார் விற்பனை செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டு வந்தனர்.
இந்த சூழலில் நிறுவனத்தில் இருந்து பார்த்தசாரதி மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளார். அவர் சென்ற சில நாட்களிலேயே நரேந்திரன்(39), முகமதுஅசாருதீன்(26) ஆகிய இருவரும் பணிக்கு வராமல் இருந்தனர். அதன் பிறகுதான், அவர்கள் 3 பேரும் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் ரூ.27 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு போலி ரசீதை கொடுத்து பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து கமலக்கண்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.