வானூர் அருகே கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

வானூர் அருகே கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-02 18:45 GMT

கார் பரிசு

வானூரை அடுத்த அருவாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி சங்கீதமாலா (வயது 36). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், தான் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், எங்கள் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட குலுக்கலில் உங்களுக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

மேலும் காரை வாங்கிக்கொள்கிறீர்களா அல்லது காருக்கு பதிலாக பணமாக பெற்றுக்கொள்ள விருப்பமா? என அந்த நபர் கேட்டுள்ளார். அதற்கு சங்கீதமாலா, பணமாக பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

மோசடி

பின்னர் காருக்குரிய பணத்தை பெற 1 சதவீதம் முன்பணம், ஜி.எஸ்.டி., கமிஷன் தொகை ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதை உண்மையென நம்பிய சங்கீதமாலா, தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கில் இருந்து ரூ.84 ஆயிரத்து 600-ஐ 3 தவணைகளாக, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர், சங்கீதமாலாவுக்கு கொடுப்பதாக கூறிய பணம் எதையும் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்