ஈரோடு கிழக்கு யாருக்கு?

Update: 2023-02-19 05:28 GMT

இடைத்தேர்தல்...

அரசின் செயல்பாடுகளை மக்கள் சீர்தூக்கிப் பார்க்கும் 'எடைத்தேர்தல்'.

இதனால் ஆளும் கட்சிக்கு இது கவுரவ பிரச்சினை. தங்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்றும் தங்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்றும் சொல்வதை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியான நிலை ஆளும் கட்சிக்கு...

எதிர்க்கட்சிக்கோ இது ஒரு சவால்; அத்துடன் மானப்பிரச்சினையும் கூட... வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று தாங்கள் செய்து வரும் பிரசாரம் உண்மை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை இடைத்தேர்தல் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

ஆளும் கட்சி வென்றால் ''தங்கள் அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்'' என்று அவர்களும், எதிர்க்கட்சி வென்றால் ''இந்த அரசு நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது'' என்று இவர்களும் பேசுவார்கள்.

நாட்டில் எங்கு இடைத்தேர்தல் நடந்தாலும் இப்படி பேசிக் கொள்வதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. இதுதான் யாதார்த்த நடைமுறை. மற்றபடி, ஒரு அரசாங்கம் வலுவான 'மெஜாரிட்டி'யுடன் இருக்கும் போது, இடைத்தேர்தல் முடிவால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவது இல்லை.

அப்படியொரு இடைத்தேர்தல்தான் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. 21 மாத கால தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. 2021-ல் நடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (திருமகன் ஈவெரா) போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது. திருமகன் ஈவெரா மறைந்ததால் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கும் இந்த தொகுதியில் ஆளும் தி.மு.க. கூட்டணியின் சார்பில் அவரது தந்தையும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை கோதாவில் இறக்கி இருக்கிறார்கள்.

பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா. போட்டியிட்ட தொகுதி இது. எனவே கூட்டணி தர்மப்படி இடைத்தேர்தலிலும் அந்த கட்சியே போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொங்கு மண்டல தொகுதி என்பதாலும், கட்சியில் தனது செல்வாக்கை நிலைநாட்ட இந்த இடைத்தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதாலும் ஜி.கே.வாசனின் ஒத்துழைப்புடன் கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க. உடைந்ததால் ஏற்பட்ட குழப்பங்கள்-இரட்டை இலை சின்னம் தொடர்பாக எழுந்த சிக்கல்-தேர்தல் கமிஷனில் முறையீடு-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு என பல தடைகளையும் தாண்டித்தான் கே.எஸ்.தென்னரசு போட்டிக்களத்துக்கு வந்து இருக்கிறார்.

அத்துடன் தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோரும் பலப்பரீட்சையில் இறங்கி இருப்பதால், ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. இவர்கள் தவிர மேலும் 73 பேரும் களத்தில் இருக்கிறார்கள்.

பொதுத்தேர்தலில் இருந்த வலுவான தி.மு.க. கூட்டணி இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. அத்துடன் பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிட்டு சுமார் 10 ஆயிரம் வாக்குகளை பெற்ற கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

அரசியலில் 'மய்யமாக' இருப்போம் என்று சொன்னவரின் வைராக்கியம், 'பிரசவ வைராக்கியம்' போல் ஆகிவிட்டதால், ''அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா'' என்ற கவுண்டமணியின் 'டயலாக்'தான் நினைவுக்கு வருகிறது.

வளர்ந்து வரும் கட்சியான சீமானின் நாம் தமிழர் கட்சியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதால் அந்த கட்சிக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளது. பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில் நாம் தமிழர் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல் தேவை இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பா.ம.க. கூறி இருப்பதால், அந்த கட்சியை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, 2008-ம் ஆண்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஆகும். 2009-ம் ஆண்டில் இருந்து மாநகராட்சியாக செயல்படும் ஈரோட்டின் பி.பி.அக்ரகாரம் பேரூராட்சி, வீரப்பன்சத்திரம் நகராட்சி, பழைய ஈரோடு நகராட்சிகளின் 40 வார்டு பகுதிகள் ஈரோடு கிழக்கு தொகுதியாக வரையறுக்கப்பட்டது.

இந்த தொகுதியில்தான் ஈரோடு மாநகராட்சி அலுவலகம், பெரியார்- அண்ணா நினைவு இல்லம், புகழ்பெற்ற ஜவுளி சந்தைகள், காய்கறி சந்தை, வ.உ.சி.பூங்கா, விளையாட்டு மைதானம் மற்றும் முக்கிய வணிகப்பகுதிகள் உள்ளன.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்று இந்த தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. ஆனார். (இப்போது அவர் தி.மு.க.வில் இருக்கிறார்.) அதன்பிறகு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டு வென்றார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய திருமகன் ஈவெராவை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தந்தை பெரியார் குடும்பத்தின் அரசியல் வாரிசாக களம் கண்ட திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 298 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேர். பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர். மூன்றாம் பாலினத்தவர் 23 பேர், ராணுவத்தினர் 22 பேர் உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதியை உள்ளடக்கிய இந்த கிழக்கு தொகுதி வாக்காளர்களில் சுமார் 33 சதவீதம் பேர் கவுண்டர்கள். முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் தவிர ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த வாக்காளர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த தொகுதியில் வட மாநிலங்களைச் சோந்த தொழிலாளர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் கணிசமானோருக்கு இங்கு ஓட்டுரிமை உள்ளது. எனவே அவர்களுடைய வாக்கு வங்கியும் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

வாக்குப்பதிவுக்காக தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். இதனால் வாக்குப்பதிவு மெதுவாகவே நடக்கும்.

தேர்தல் பணிக்காக 1,206 வாக்குச்சாவடி அதிகாரிகள், 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் அரியணையில் அமர்ந்த பிறகு தி.மு.க. சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால், முடிவு எப்படி இருக்கும் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தொகுதியில் தலைவர்கள் முற்றுகையிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். கொடி, தோரணங்கள், பிரசாரம் என்று தொகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பொதுத்தேர்தலின்போது தி.மு.க.வுடன் இருந்த காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இப்போதும் கூட்டணியில் நீடிப்பதாலும், புதிதாக மக்கள் நீதி மய்யம் ஆதரவு கரம் நீட்டி இருப்பதாலும் இந்த கூட்டணி வலுவாகவே உள்ளது. தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் கடந்த சுமார் 2 ஆண்டுகளாக தங்கள் அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கிறார்கள். கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் சு.முத்துசாமி அமைச்சராக இருந்த போது, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இப்போது தி.மு.க. அரசில் அமைச்சராகவும், ஈரோடு மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வும் இருக்கும் அவருக்கு, கிழக்கு தொகுதியின் வெற்றி கவுரவ பிரச்சினை என்பதால் மும்முரமாக பணியாற்றுகிறார்.

மறைந்த திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்கு தொகுதிக்காக ரூ.400 கோடிக்கான திட்டங்களை முதல்-அமைச்சரிடம் கேட்டுப்பெற்றதாக தி.மு.க. அமைச்சர்களே கூறுகிறார்கள். அந்த திட்டங்கள் முழுமை பெற தனக்கு ஆதரவு அளிக்கமாறு கோரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம் செய்து வருகிறார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை விரைவுபடுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதிலும், புதிய திட்டங்களை தொடங்குவதிலும் தி.மு.க. ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். அந்த அடிப்படையில் கனிமார்க்கெட், காளைமாடு சிலை வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு விட்டன. இங்கு, கடைகள் ஒதுக்கீடு சார்ந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு விட்டால் விரைவில் அவை செயல்பாட்டுக்கு வரும். கலெக்டர் அலுவலக புதிய கட்டிடமும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதேபோல் புதிய சாலைகள் அமைத்தல், குடிநீர் இணைப்பு கொடுத்தல் போன்ற பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், கூட்டணி கட்சிகளின் பலம் இருப்பதாலும் களத்தில் தி.மு.க. மிகுந்த நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் வலம் வருகிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை கொங்கு மண்டலம் அவர்களுக்கு சாதகமான பகுதி என்பதாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பதாலும் தெம்புடன் இருக்கிறார்கள். அத்துடன் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவரையே அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.

பாரதீய ஜனதா, த.மா.கா., புதிய நீதிக்கட்சி மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு உள்ளது. கடந்த பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. இப்போது யாருக்கும் ஆதரவு இல்லை என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.

எடப்பாடி பழனிசாமியும் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் அடங்கிய அ.தி.மு.க. குழுவினரும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், பாரதீய ஜனதா தலைவர்களும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். த.மா.கா.வின் விடியல் சேகர், எம்.யுவராஜா ஆகியோரும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ, அந்த அளவுக்கு பாரதீய ஜனதாவுக்கும் அக்கறை இருக்கிறது. அ.தி.மு.க. வெற்றி பெறுவதன் மூலம் தி.மு.க. அரசுக்கு எதிராக தாங்கள் செய்து வரும் பிரசாரத்துக்கு வலு சேர்க்க முடியும் என்று பாரதீய ஜனதா தலைவர்கள் கருதுவதே இதற்கு காரணம்.

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஏற்கனவே 2 முறை (ஈரோடு தொகுதியில் 2001-2006, ஈரோடு கிழக்கு தொகுதியில் 2016-2021) எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். கடந்த முறை அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது 'அம்ருத்' திட்டம் மூலம் மாநகராட்சிக்காக ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை சிறப்பு பல்நோக்கு ஆஸ்பத்திரியாக மாற்ற புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது; ஈரோடு ஜவுளி சந்தையான கனி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டியது; காளைமாடு சிலை பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டியது; நேதாஜி காய்கறி சந்தை கட்டும் பணி; கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் என்று அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிடுகிறார். இந்த திட்டங்கள் தவிர ஈரோட்டில் இந்த ஆட்சியில் வேறு எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

ஆளாளுக்கு அவரவர் சாதனைகளை பட்டியலிட்டாலும், தொகுதியில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஊராட்சிக்கோட்டை திட்டத்தை முதலில் அறிவித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தொடர்ந்து அதைசெயல்படுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. திட்டப்பணிகளை தொடங்கி வைத்தவர் மற்றொரு முன்னாள் முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமி என்று அந்த திட்டத்துக்கு நீண்டவரலாறு உள்ளது. ஆனால் இதுவரை மாநகராட்சி பகுதி முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று மக்கள் புகார் கூறுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியையொட்டி பரந்து விரிந்த காவிரி ஆறு உள்ளது. ஈரோட்டில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாத சூழலில் காவிரிக்கரையை அழகிய சுற்றுலாதலமாக்க வேண்டும் என்கிறார்கள் தொகுதி மக்கள்.

மஞ்சளுக்கான விலை நிர்ணயம், ஜவுளித்தொழில் பாதுகாப்பு, விசைத்தறியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, இலவச மின்சாரம், சாயக்கழிவு விவகாரம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன.

சமீபத்திய சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவையும் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் மனநிலையை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. பல்வேறு அம்சங்களையும் சீர்தூக்கி பார்த்தே அவர்கள் முடிவு எடுப்பார்கள். அவர்கள் முடிவு என்ன என்பது மார்ச் 2-ந்தேதி தெரிந்துவிடும்.


தாமரை இலை தண்ணீராக அ.தி.மு.க. அணிகள்



எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நீயா-நானா? என்று முஷ்டியை உயர்த்திக் கொண்டிருக்கும் நிலையில், 'தல' இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் ஒரு விசித்திரமான தேர்தல் இது.

இரட்டை இலை சின்னத்துக்காக அ.தி.மு.க. அணிகளிடையே ஏற்பட்ட ஒற்றுமை தற்காலிக ஏற்பாடு என்பதால், அவர்களிடையேயான உறவும், ஒத்துழைப்பும் தாமரை இலை தண்ணீர் போல்தான் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு எடப்பாடி பழனிசாமியால் நிறுத்தப்பட்டவர். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் வாக்குகள் முழுதாக கிடைக்குமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது.

தன்னால் எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டு, அதனால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் பொதுக்குழு ஒருமனதாக வேட்பாளரை தேர்வு செய்ய ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டாரே தவிர, எடப்பாடியின் வேட்பாளர் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக அல்ல என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அ.தி.மு.க. இரண்டாக உடைந்த போது, 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. அந்த தேர்தலில் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. தேர்தலில் இரு அணிகளும் பலத்த அடி வாங்கியதால் ஜானகி அம்மாள் அரசியலில் இருந்து விலக்கிக்கொள்ள, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றிணைந்தது. இதனால் அக்கட்சிக்கு மீண்டும் இரட்டை இலை கிடைத்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அக்கட்சி மீண்டும் உடைந்ததால் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டது. சசிகலா சிறை செல்ல, முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்ததால், அந்த ஆண்டு நவம்பர் மாதம் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் மீண்டும் வழங்கியது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என அ.தி.மு.க. மீண்டும் உடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்காவது வழங்கப்படுமா? அல்லது முடக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் இரு தரப்பினருமே சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, சின்னம் முடக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து இரு தரப்பினருமே இறங்கி வந்ததால், முடக்கப்படும் ஆபத்தில் இருந்து இரட்டை இலை தற்காலிகமாக தப்பியது.

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், ஓ.பன்னீர் செல்வம், தான் அறிவித்த வேட்பாளர் செந்தில்குமரனை வாபஸ் பெற்றுக்கொண்டு, எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கே.எஸ்.தென்னரசுவுக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் அதிகாரி ஒதுக்கி இருக்கிறார்.

தங்கள் கட்சியின் சின்னத்தை பெறுவதற்கே இவ்வளவு போராடவேண்டிய நிலை ஏற்பட்டது அ.தி.மு.க.வுக்கு துரதிருஷ்டமான ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படி ஒரு பரிதாப நிலைமை ஏற்பட்டதற்கு, கட்சிக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று அசைக்க முடியாத வலுவான தலைமை இல்லாததே காரணம்.

ஆளுக்கொரு பக்கமாக இழுத்ததால் இரண்டாக கிழிந்து கொண்டிருந்த இருந்த இரட்டை இலை, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால் ஒட்டுப்போட்டு தைக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் சூறாவளியில் இலை எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கும் என்பது இரு கோஷ்டிகளின் ஒத்துழைப்பிலும், வாக்காளர்களின் கையிலும்தான் இருக்கிறது.

இதற்கிடையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ்பாடும் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வும் வேட்பாளரை அறிவித்துவிட்டு, குக்கர் சின்னம் கிடைக்காததால் களத்தில் இருந்து 'ஜகா' வாங்கிவிட்டது. இதனால் அந்த கட்சியின் வாக்குகள் எந்தப்பக்கம் சாயும் என்று தெரியவில்லை. (கடந்த தேர்தலில் அ.ம.மு.க. 'நோட்டா'வுக்கும் குறைவான வாக்குகளே பெற்றது குறிப்பிடத்தக்கது.)

இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றால், அது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டு, அவரது கை மேலும் ஓங்கிவிடும். அந்த வெற்றியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் ஒத்துழைப்பு மற(றை)க்கப்பட்டுவிடும்.

தென்னரசு வெற்றி வாய்ப்பை இழக்கும்பட்சத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்றும், கொங்கு மண்டலத்திலேயே அவர் நிறுத்திய வேட்பாளரால் வெற்றிபெற முடியவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பால் பிரசாரம் செய்யப்படும்.

எப்படி பார்த்தாலும், அ.தி.மு.க.வுக்கு இது சோதனையான காலகட்டம்தான்.


ஒரு ஓட்டும், ஒரு திட்டமும்...

மேற்கு, கிழக்கு என பிரிக்கப்படுவதற்கு முன் ஒரே தொகுதியாக இருந்த ஈரோடு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சு.முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்து உள்ளனர்.

ஈரோடு தொகுதியில் 1946-ல் போட்டியின்றி வெற்றி பெற்ற தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் சட்டசபையில் தனித்துவம் பெற்று விளங்கினார். ஏ.டி.பிரகாசம் சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராக வர, இவரது ஒரு ஓட்டு தேவைப்பட்டது. அதற்காக அவர் வைத்த பெரும் கோரிக்கைதான் கீழ்பவானி பாசன திட்டம். அன்று தனக்கென்று ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லாத எம்.ஏ. ஈஸ்வரன், 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதற்கான அந்த திட்டத்தை மக்களுக்கு பெற்றுத்தந்தார்.

வெற்றியை தீர்மானிப்பது எது?

சின்னம் கட்சியின் வெற்றிக்கு ஓரளவு உதவுமே தவிர, அதை மட்டுமே நம்பி களத்தில் குதிப்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என்பதை கடந்த கால தேர்தல்கள் நிரூபித்து இருக்கின்றன.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு 1973-ல் நடந்த இடைத்தேர்தல் அ.தி.மு.க. எதிர்கொண்ட முதல் தேர்தல்; இரட்டை இலை சின்னமும் புதிது. ஆனால் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது, காரணம் இரட்டை இலையா? அல்ல; எம்.ஜி.ஆர். என்ற மக்கள் தலைவன். அந்த தேர்தலில், மிகவும் பிரபலமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளருக்கு 3-வது இடம்தானே கிடைத்தது.

அவ்வளவு ஏன்? ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017-ல் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 'குக்கர்' சின்னத்தில் போட்டியிட்ட அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் இரட்டை இலையையும், தி.மு.க.வின் உதயசூரியனையும் வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவில்லையா?

எனவே, ஒரு வேட்பாளரின் வெற்றிக்கு மக்கள் ஆதரவுடன், படைபலம், பணபலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் முக்கிய காரணங்களாக அமைகின்றன என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

யாருக்கு எவ்வளவு ஓட்டு?

2021 பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 292 வாக்குகள் (66.82 சதவீதம்) பதிவாயின.

இதில் முக்கிய கட்சிகள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-

திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) -67,300

எம்.யுவராஜா (த.மா.கா.) -58,396

ச.கோமதி (நாம் தமிழர்)- 11,629

ஏ.எம்.ஆர்.ராஜ்குமார்(மக்கள் நீதி மய்யம்)-10,005

எஸ்.ஏ.முத்துக்குமரன் (அ.ம.மு.க.)-1,204

எஸ்.கோவிந்தராஜ்(பகுஜன் சமாஜ் கட்சி) -372

நோட்டா-1,546

Tags:    

மேலும் செய்திகள்