முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா: திருவப்பூரில் நாளை ஜல்லிக்கட்டு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

Update: 2023-02-24 18:30 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதையொட்டி திரளான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை எடுத்து வந்து சாற்றுவது உண்டு. மேலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் அம்மன் படம் வைத்தும் பூக்களை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். இதனால் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெறும். பூச்சொரிதல் விழாவையொட்டி திருவப்பூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஜல்லிக்கட்டு நாளை கவிநாடு கண்மாயில் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களாக கடந்த 3 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

கொரோனா பரிசோதனை

ஜல்லிக்கட்டிற்காக கவிநாடு கண்மாயில் காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய பகுதி, காளைகள் பாய்ந்தோடும் பகுதி, பார்வையாளர்கள் இடம் ஆகியவற்றில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. காளைகளின் உரிமையாளர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைனில் பதிவு நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்