கரைபோட்டான் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர்மழை காரணமாக வளையப்பட்டி அருகே உள்ள கரைபோட்டான் ஆற்றில், 2-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Update: 2022-11-13 18:37 GMT

தொடர்மழை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராசிபுரம் பகுதியில் 18 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

ராசிபுரம்-18, மங்களபுரம்-12, குமாரபாளையம்-11, புதுச்சத்திரம்-8, பரமத்திவேலூர்-5, கொல்லிமலை-5, நாமக்கல்-4, சேந்தமங்கலம்-3, கலெக்டர் அலுவலகம்-2, திருச்செங்கோடு-2.

வெள்ளப்பெருக்கு

தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 34 ஏரிகள் இதுவரை நிரம்பி உள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக வளையப்பட்டி அருகே உள்ள கரைபோட்டான் ஆற்றில் 2-வது முறையாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக மருதம்பட்டி, எம்.களத்தூர் செல்லும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள ஆண்டாபுரம், எம்.களத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

எனவே அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மேய்க்கல்நாயக்கன்பட்டி, செவிந்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வேறுவழியின்றி சுமார் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் ஆபத்தை உணராமல் வெள்ள நீரில் கடந்து செல்வதும், சிறுவர்கள் குதூகலமாக குளித்தும் வருவதை பார்க்க முடிகிறது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்