செப்டம்பர் மாதம் முதல் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!

செப்டம்பர் மாதம் முதல் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது.

Update: 2023-07-30 06:10 GMT

சேலம்,

சேலம் காமலாபுரம் விமான நிலையம் கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் முன்வரவில்லை. பின்னர் அரசின் முயற்சியால் கடந்த 2018-ம் ஆண்டில் உதான் திட்டத்தின் கீழ் ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் சென்னை - சேலம் இடையே விமான போக்குவரத்து தொடங்கியது. தினமும் காலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கும் மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து சென்னைக்கும் ஒரே ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்தது. கொரோனாவுக்கு பின், அதாவது கடந்த 2020-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கும், விமான போக்குவரத்து துறைக்கும் கோரிக்கை விடுத்தனர். மேலும் சேலம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. பார்த்திபனும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனமும் மற்றும் இண்டிகா விமான நிறுவனமும் முன்வந்துள்ளன. அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனம் சார்பில் பெங்களூரு-சேலம், கொச்சின்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய விமான சேவைகளை வாரத்தில் 7 நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையில் 2 விமானங்கள் ஈடுபட உள்ளன.

அதேபோல் இண்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூரு-சேலம், ஐதராபாத்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய சேவைகளை வாரத்தில் 4 நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு 1 விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. சேலம்-சென்னை இடையேயான விமான சேவைக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் விமானங்கள் வந்து நிற்கும் வகையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக பலர் தாமாகவே முன்வந்து நிலங்களை வழங்கினர். தற்போது 136 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் அமைந்துள்ளது.

விமான நிலையத்தில் 6 ஆயிரம் அடி நீளத்துக்கு ரன்வே உள்ளதை விரிவாக்கம் செய்து 8 ஆயிரம் அடி நீளத்துக்கு ரன்வே மாற்றப்பட்டுள்ளது. தற்போது 2 விமானங்கள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு இடம் உள்ளது. ஒரே நேரத்தில் 4 விமானங்கள் நிறுத்தி வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்