குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளை நீர்வீழ்ச்சியில் இருந்து பாதுகாப்பாக வனத்துறையினர் வெளியேற்றினர்.

Update: 2023-09-30 19:30 GMT

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது.

இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் நீர்வீழ்ச்சியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. இதற்கிடையில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, காந்தி ஜெயந்தியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் நேற்று குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஆழியாறு சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. காலையில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் வனத்துறையினர் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.


இந்த நிலையில் மதியத்திற்கு பிறகு நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதற்கிடையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும் நீர்வீழ்ச்சி பகுதிக்கு அத்துமீறி செல்வதை தடுக்க நுழைவு வாயில் மூடப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீரென்று தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் நாளை (இன்று) நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரை பொறுத்து சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்