முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழசாக்குளம் கண்மாயில் 5 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கீழசாக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் இருந்து தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது கண்மாயில் நீர் வற்றியதால் மீன்பிடி திருவிழா அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராமத்திலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்மாயில் இறங்கி ஊத்தா வலை, தூரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன் பிடிக்க தொடங்கினர்.
அப்போது பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் ஒரு சிறுமி பக்குவமாக 3 கிலோ கெண்டை மீனை பிடித்து சமையலுக்கு கொண்டு சென்றார். இதை தொடர்ந்து நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, அயிரை, விரால், கட்லா ஆகிய மீன் வகைகள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் வீட்டுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர்.