இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு தொண்டமாந்துறையில் நாளை நடக்கிறது.

Update: 2023-04-10 18:02 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசுகையில், மாவட்ட நிர்வாகத்தினரால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாத காளையின் உரிமையாளர், அவரது உதவியாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. வீரர்கள் காளைகளின் திமிலை தழுவியபடி 15 மீட்டர் செல்லவோ, 30 வினாடிகள் தழுவியபடி செல்லவோ அல்லது காளைகளின் 3 துள்ளல்களை கட்டுப்படுத்தி தழுவியபடி சென்றால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். ஜல்லிக்கட்டு போட்டியினை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நல்ல முறையில் நடைபெற விழாக்குழுவினர் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். விழா குழுவினர்கள் அனைவரும் அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு குழுத்தலைவர்கள் காளைகளுக்கும், பார்வையாளர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கி முழு பொறுப்பேற்று எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பாக நடத்திட வேண்டும், என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்