சிவகாசி,
சிவகாசி வேலாயுதம் ரோட்டில் வசித்து வரும் ராமச்சந்திரன் மகன் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை திருத்தங்கல் ரோட்டில் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று தீப்பெட்டி உற்பத்தியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மதியம் 2 மணிக்கு தொழிலாளர்கள் சாப்பிட சென்ற போது தீப்பெட்டிகள் தயாரிக்கும் எந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே ஆலை நிர்வாகத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வாகனம் தீ விபத்து நடந்த ஆலைக்கு வந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீப்பெட்டி, பட்டாசு ஆலை ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். சேதங்களை சரி செய்யும் வரை தீப்பெட்டி உற்பத்திக்கு அவர் தடை விதித்தார்.