பட்டாசு ஆலை விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

பட்டாசு ஆலை விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2023-01-20 19:54 GMT

தாயில்பட்டி, 

தாயில்பட்டி கணஞ்சாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். 25 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரான மாயக்கண்ணன் (வயது 50), அவரது மனைவி ஆறுமுகத்தாய் (45), குத்தகைதாரர் கந்தசாமி (55), போர்மேன் கண்ணன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் பட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் கைது செய்யப்பட்டார். பட்டாசு விபத்து நடந்த இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி வட்டாட்சியர் லோகநாதன், தாயில்பட்டி வருவாய் அலுவலர் விக்னேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சிதறிய பட்டாசு துகள்களை சேகரித்தனர். மேலும் இடிபாடுகள் இடையே சோதனை நடத்தி ஆலையை முழுமையாக ஆய்வு நடத்தினர்.

பட்டாசு ஆலை விபத்தில் பலியான அமீர் பாளையத்தை சேர்ந்த சங்கர், சாத்தூர் சத்திரப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் நிதி உதவியாக தலா ரூ. 5½ லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்