கருக்கலைப்பு செய்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மாயம்

தொட்டியம் அருகே கருக்கலைப்பு செய்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ெபண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-31 19:11 GMT

தொட்டியம், ஜூன்.1-

தொட்டியம் அருகே கருக்கலைப்பு செய்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ெபண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருக்கலைப்பு

தொட்டியம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் மீண்டும் கர்ப்பமானார். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத அந்த பெண் கருவை கலைப்பதற்காக அரசு மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கும் நர்சு ஒருவரை அணுகியுள்ளார். இதையடுத்து அந்த நர்சு, தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியில் இயங்கும் மருந்து கடை உரிமையாளர் உதவியுடன், அந்த மருந்து கடையின் அருகில் உள்ள சிறிய அறையில் அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதனால் அந்த பெண்ணுக்கு அதிகமான உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த ெபண் இருப்பதை கண்ட அவரது உறவினர்கள், அவரை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் உள்நோயாளியாக அவரை அனுமதித்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த பெண் மருத்துவமனையில் இருந்து மாயமானார்.

மருத்துவமனையில் இருந்து மாயம்

இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஜான் எட்வர்ட், முசிறி போலீசில் புகார் அளித்தார். அதில், செவந்திபட்டியில் மருந்து கடை நடத்தி வருபவரால் சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை காணவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை யாரேனும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிய மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சட்டவிரோதமாக மருந்து கடை அருகே கருக்கலைப்பு செய்து பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்