பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

போலீசாரை கண்டு அஞ்சிய காலம் போய், போலீசாரை தாக்கும் நிலை வந்திருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;

Update:2024-09-04 13:12 IST

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 'கொலை, கொள்ளை செய்தி' என்ற தலைப்பில் செய்திகளை வெளியிடும் அளவுக்கு அன்றாடம் குறைந்தபட்சம் 15 முதல் 20 கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. அதிகளவிலான மது விற்பனை, கள்ளச் சாராயம், போதைப் பொருட்களின் நடமாட்டம் போன்றவைதான் தமிழ்நாட்டில் கொடூரச் செயல்கள் நடைபெறுவதற்கு காரணங்களாக விளங்குகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு கவனம் செலுத்துவதில்லை.

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒட்டுநரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் திருச்சுழி ரோடு, கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சென்றபோது, அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பெண் டி.எஸ்.பி. தலை முடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திவந்துள்ளது.

பெண் டி.எஸ்.பி.யை தாக்கிய செயல் கடும் கண்டனத்திற்குரியது. போலீசாரை கண்டு அஞ்சிய காலம் போய், போலீசாரை தாக்கும் நிலை வந்திருக்கிறது. சமூக விரோதிகள் மீது மென்மையான போக்கினை திமுக அரசு கடைபிடிப்பதுதான் இதுபோன்ற நிலைமைக்கு காரணம். திமுக அரசு செயலற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப்பட்டு இருக்கிறது.

எந்த ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறதோ அந்த நாட்டை நோக்கிதான் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள். தொழில்கள் தொடங்குவதற்கு அடித்தளமாக விளங்கும் சட்டம் ஒழுங்கை சீர் செய்தாலே அந்நிய முதலீடுகள் தானாக தமிழ்நாட்டை தேடிவரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஓட்டுநரை வெட்டிக்கொலை செய்தவர்களையும், அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டுமென்றும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் திமுக அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்