தர்மபுரியில்ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

Update: 2023-03-05 19:00 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

தர்மபுரி மாவட்ட ஜாக்டோ, ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், தமிழாசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் ராசா ஆனந்தன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் காவேரி வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜீவா, மணி மாதேஸ்வரன், கலியுல்லா, கிருஷ்ணன், பெருமாள் ஆகியோர் பேசினர்.

காலிப்பணியிடங்கள்

போராட்டத்தில் காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை அரசு தடை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ந் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக தமிழ் ஆசிரியர் கழக சிறப்பு தலைவர் ஆறுமுகம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முடிவில் நிதி காப்பாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்