பருத்தி, மிளகாய் சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்தும் விவசாயிகள்
பருவ மழையை எதிர்பார்த்து முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய கிராமங்களில் பருத்தி, மிளகாய் சாகுபடிக்காக விவசாயிகள், டிராக்டர் மூலம் உழுது நிலத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர்,
பருவ மழையை எதிர்பார்த்து முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய கிராமங்களில் பருத்தி, மிளகாய் சாகுபடிக்காக விவசாயிகள், டிராக்டர் மூலம் உழுது நிலத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பருத்தி, மிளகாய்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி, மிளகாய் விவசாயமே அதிகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முதுகுளத்தூர், சாயல்குடி கடலாடி சுற்றியுள்ள பல கிராமங்களிலும் அதிகமாகவே மிளகாய் பருத்தி, விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்திற்காக முதுகுளத்தூர் அருகே உள்ள மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், தேரிரு வேலி, கருமல், செங்கற்படை, பூசேரி, மிக்கேல்பட்டினம், கீழதூவல், கீழச்சிறுபோது, மல்லல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழுது விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
பருவமழை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இருப்பினும் விவசாயிகள் தற்போதே விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் உழுது அதில் பருத்தி விதைகளையும், மிளகாய் விதைகளையும் தூவுவதற்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் பருத்தி மற்றும் மிளகாய் விளைச்சல் அதிகமாகவே பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடக்க வேண்டும் என்பதே ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.