கார் கிணற்றுக்குள் பாய்ந்து விவசாயி பலி

சேந்தமங்கலம் அருகே ஓட்டி பழகியபோது கார் கிணற்றுக்குள் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். கற்றுக்கொடுத்த மகன் உயிர் தப்பினார்.;

Update:2023-10-04 00:14 IST

சேந்தமங்கலம்

விவசாயி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வலப்பூர் நாடு ஊராட்சி குழி வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). விவசாயி. இவர் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி தெற்கு தெரு திருமலைகிரி பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி கலைமணி. இவர்களுக்கு கோபி (23) என்ற மகனும், மாலினி என்ற மகளும் உள்ளனர். கோபி பொக்லைன் டிரைவர்.

ராஜேந்திரன் சொந்தமாக கார் வைத்திருந்தார். இதனால் அவர் கார் ஓட்ட ஆசைப்பட்டதால் தனது மகன் கோபியுடன் அடிக்கடி கார் ஓட்டி பழகி வந்தார். கோபியும், தனது தந்தைக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்தார். அதேபோல நேற்று மாலை ராஜேந்திரன் தோட்டத்து வீட்டில் இருந்து தனது மகனை அருகே உட்கார வைத்து காரை பின்னோக்கி இயக்கினார். அந்த கார் திடீரென அங்கிருந்த சுமார் 40 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. அப்போது சுதாரித்துக் கொண்ட கோபி கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து உயிர் தப்பினார். ஆனால் அவரது தந்தை ராஜேந்திரன் நீச்சல் தெரியாததால் காருடன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

உடல் மீட்பு

இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு இதுபற்றி தெரிவித்தார். அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராஜேந்திரன் உடலையும், காரையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம் அருகே கார் ஓட்டி பழகியபோது கிணற்றுக்குள் பாய்ந்து விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்