நிலப்பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை

நிலப்பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-04 19:28 GMT

பெரம்பலூர்:

மது போதையில் விழுந்ததாக...

பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே கீழக்கரையை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). விவசாயி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு செல்வம் அதே பகுதியில் உறவினர் ஒருவர் வயலில் மது போதையில் கீழே விழுந்து படுகாயமடைந்து கிடப்பதாக, அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற அவர்கள் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதல்

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் செல்வம் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் செல்வத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான நாராயணசாமியின் மகன் ராஜாராமுக்கும்(24) இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு செல்வம் மது போதையில் ராஜாராம் வயலுக்கு சென்று, அவரது தாய் செல்லத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் செல்வத்தை மூங்கில் கம்பால் அடித்துள்ளார்.

என்ஜினீயர் கைது

இதில் கீழே விழுந்ததில் செல்வத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராஜாராமை கைது செய்தனர். கைதான ராஜாராம் என்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்