விழுப்புரத்தில் வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி

விழுப்புரத்தில் வாலிபரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-20 19:21 GMT

அதிக லாபம்

விழுப்புரம் சங்கரமட தெருவை சேர்ந்தவர் லலித்குமார் (வயது 30). இவருடைய செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்டு பகுதிநேர வேலை தேவையெனில் உங்களுடைய விவரங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.

அதன்படி லலித்குமார், தன்னுடைய விவரங்களை அந்த நபரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு லலித்குமாரை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து அந்த லிங்கினுள் சென்று தனக்கான பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்த பின் சிறிய தொகையை ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.

வாலிபரிடம் பணம் மோசடி

இதை நம்பிய லலித்குமார், ரூ.870-ஐ செலுத்தி ரூ.1,164-ஐ பெற்றார். பின்னர் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.62 ஆயிரத்து 55-ஐ 2 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், டாஸ்க் முடித்த பின்னரும் லலித்குமாருக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து லலித்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்