நெகிழிக்கான மாற்றுப்பொருட்கள் கண்காட்சி

நெகிழிக்கான மாற்றுப்பொருட்கள் கண்காட்சி

Update: 2023-03-19 19:53 GMT

தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் நெகிழிக்கான மாற்றுப்பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

கண்காட்சி

தஞ்சை மாவட்டம் நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் நெகிழிக்கான மாற்றுப்பொருட்கள் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சி அரங்கில் நெகிழி மாற்றுப் பொருட்களான காகித பொருட்கள், பனை ஓலை பொருட்கள், சணல் பொருட்கள், தென்னை நார் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. அதேபோல் வாழை நார் பொருட்கள், களிமண் பொருட்கள், துணி பொருட்கள், மூங்கில் பொருட்கள், மக்கும் பொருட்கள், துணி விளம்பர பதாகை ஆகியவை இடம் பெற்று இருந்தன.

கடும் நடவடிக்கை

இந்த பொருட்களை எல்லாம் பார்வையிட்ட பின்னர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு மற்றும் தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அபராதம்

முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,000-மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரவிச்சந்திரன், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகா மைக்கேல், செயலாளர் பர்வீன், பொருளாளர் செல்வராணி, செஞ்சிலுவை சங்க துணைத் தலைவர் முத்துக்குமார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ், ஜனசேவா பவன் சியாமளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்