10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என தகவல் வெளியானது.

Update: 2023-06-27 10:25 GMT

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 14-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஜூன் 27) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் சில அறிவுத்தல்கள் வழங்கப்பட்டு வருகினறன. குறிப்பாக, பொதுத்தேர்வை சந்திக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என்பதை பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது எப்போதும் நடைபெறுவதுதான்.

தேவைப்படும், விரும்பும் பள்ளிகள் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம். எனினும் இது கட்டாயமில்லை. அறிவுறுத்தலாகவே முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்