கடலூர் மையப்பகுதியில் தேர்வு செய்த இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கடலூர் மையப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-09-30 07:51 GMT

சென்னை,

அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக கடலூர் மையப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே குறிஞ்சிப்பாடி தொகுதி, எம்.புதூரில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள திமுக அரசைக் கண்டித்து கடலூர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் அக்டோபர் 6-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மக்களுக்குத் தொண்டு செய்திட வேண்டும்; அனைத்து நிலைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், எம்.ஜி.ஆரால் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியிலும், மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு முத்தான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, பல்வேறு முத்தான திட்டங்களை நிறுத்தியும், மாற்றங்கள் செய்தும், மக்கள் விரோத அரசாகத் திகழ்ந்து வருகிறது. மக்களுக்கு பல்வேறு வகைகளில் இடையூறுகளை செய்து வரும் இந்த ஆட்சிக்கு, மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த வகையில், எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சியின்போது, கடலூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 18.26 ஏக்கர் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், விதிவசத்தால் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக அரசு, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை, சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எம். புதூருக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மனச் சுமையும், பொருளாதார சுமையும், கால விரயமும் ஏற்படும்.

அதேபோல், திமுக ஆட்சியில், கடலூர் மாநகராட்சியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகளும், கழிவு நீரும் தேங்கிக் கிடப்பதால் டெங்கு, காலரா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கழக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக கடலூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை, பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே, குறிஞ்சிப்பாடி தொகுதி, எம். புதூரில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியின்போது தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வலியுறுத்தியும்; கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கடலூர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 6.10.2023 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், கடலூர் மாநகராட்சி தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் நலனை முன்வைத்தும்; அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், மகளிரும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்