1 டன் திராட்சை பழங்களால் உருவாக்கப்பட்ட கழுகு உருவம்

குன்னூரில் புகழ்பெற்ற பழக்கண்காட்சி தொடங்கியது. இதில் 1 டன் திராட்சை பழங்களால் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Update: 2022-05-28 14:43 GMT

குன்னூர், 

குன்னூரில் புகழ்பெற்ற பழக்கண்காட்சி தொடங்கியது. இதில் 1 டன் திராட்சை பழங்களால் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது. கடந்த 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி நேற்று தொடங்கியது.

கண்காட்சியை குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தொடங்கி வைத்தார். பூங்கா நுழைவுவாயில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிற மாவட்டங்களில் விளையும் பழங்களை கொண்டு அரங்குகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக 1 டன் திராட்சை பழங்களை கொண்டு 12 அடி நீளம், 9 அடி உயரத்தில் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

பாண்டா கரடி

மேலும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு வகையான பழங்களை கொண்டு தேன்‌ வண்டு, பாண்டா கரடி போன்ற அலங்காரங்கள் இடம் பெற்றது. மீண்டும்‌ மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ மஞ்சப்பை வடிவம் மற்றும் ஊட்டியை கண்டறிந்து நிறைவடைந்த‌ 200-வது ஆண்டினை குறிக்கும் வகையில்‌ ஊட்டி-200 என்று பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கண்காட்சியில்‌ செங்கல்பட்டு, சிவகங்கை, கன்னியாகுமரி, நாமக்கல்‌, கரூர்‌, கடலூர்‌, மதுரை, திருச்சி, பெரம்பலூர்‌, திருவள்ளூர்‌, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு பழங்களை கொண்டு டிராகன்‌, அணில்‌, புலி, பூண்டி ௮ணை, மீன்‌, தாஜ்மகால்‌, கடல்‌ குதிரை, மயில்‌, ஜல்லிக்கட்டு காளை போன்ற உருவங்கள்‌ தத்ரூபமாக காட்சிக்கு வைக்கப்பட்டது. பழங்களால் ஆன பல்வேறு உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள்

தோட்டக்கலைத்துறை மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழக்கண்காட்சி நிறைவடைகிறது. விழாவில் குன்னூர் ஆர்.டி.ஓ. துரைசாமி, தோட்டக்கலை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், நந்தினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்