வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டிக்கு குடிநீர்

வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2023-09-11 19:05 GMT

காரியாபட்டி, 

வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மகளிர் உரிமை தொகை

காரியாபட்டி பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்பில் பஸ் நிலைய விரிவாக்க பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து விஷயங்களையும் செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. காரியாபட்டி பேரூராட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அம்ருத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் திட்டம்

ரூ.70 கோடி மதிப்பில் சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காரியாபட்டி பஸ்நிலையத்தை ரூ. 2 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 2 கோடியே 47 லட்சத்தில் மழை நீர் வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட விவசாய தொழிலாளரணி தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சங்கர பாண்டியன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் வாலைமுத்துசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்