வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

Update: 2023-06-03 18:45 GMT

நாகை மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

நாகை மாவட்டத்தில் ரூ.3 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால் மற்றும் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளருமான அருண்ராய், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஆனைமங்களம் ஊராட்சி ஓர்குடி கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் மற்றும் தெத்தி வடிகால் 3 கிலோமீட்டர் தூரம் வரை தூர் வாரும் பணியினையும், ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வெண்மணி இறிஞ்சியூர் வாய்க்கால் 3 கி.மீ. தூரம் மற்றும் தெற்கொடியார், இருக்கை, கருப்புட்டி, பூமாக்கன்னி ஆகிய வடிகால்கள் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டார்.

விரைந்து முடிக்க வேண்டும்

மேலும் ரூ.8 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பட்டமங்கலம் ஊராட்சி குழிச்சிக்கொல்லை கிராமத்தில் உள்ள குழிச்சிக்கொல்லை வாய்க்கால் தூர்வாரும் பணியையும் ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் மேல வெண்மணி வாய்க்கால் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் கமலக்கண்ணன், சாக்ரடீஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்