மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்புகள் பற்றிய பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் - மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்புகள் பற்றிய பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-05-11 06:48 GMT

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் (Employment News) அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

எனவே, வேலை வாய்ப்புக்குத் தகுதியுடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் (Whatsapp) வெளிவரும் போலியான சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இந்நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யாக இணைய தளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை / விளம்பரங்களை நம்பி, அதிகார பூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்