தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் ரேகா (வயது 18). இவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் முதல் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலை செய்யும் பணிக்கு சேர்ந்தார்.
ஆனால் ரேகாவுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சேர்ந்து ரேகாவை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட ரேகா அளித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுவது, தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த 25-ம் தேதி ஆந்திராவில் கைது செய்தனர்.
இதயடுத்து அவர்களை தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். பின்னர் சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை பிப்ரவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது.