தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-01-12 00:22 GMT

தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. கட்சி நேற்று வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர் அவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. நாள்தோறும் பத்திரிகை, ஊடக செய்திகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் தொல்லை என்ற செய்திகள் வருகின்றன. அவற்றை இந்த அரசு தடுக்க தவறிவிட்டது. அதைதான் இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தோம். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதில் அரசு விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில், பாதுகாப்பிற்காக வந்திருந்த பெண் காவலருக்கு தி.மு.க.வினர் 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர். அந்தப் பெண் காவலர் புகார் கொடுத்ததும் தி.மு.க.வினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்கள் கழித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

அவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டாலும் உடனே கைது செய்யப்படவில்லை. ஒரு பெண் காவலரே புகார் அளித்தும் அதை நம்பவில்லை. விசாரித்துதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. சொல்கிறார். இப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது என்பதைத்தான் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து போதை பொருட்களில் சந்தை களமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாக வெளிநாட்டிற்கு போதை பொருள் கடத்தும் சம்பவம் அதிகரிக்கிறது. கஞ்சா, கொகைன் போன்றவை தமிழ்நாட்டில், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் பகுதிகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதையும் பேச அனுமதிக்கவில்லை. நடுநிலையோடு செயல்படாதது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. வேண்டுமென்றே எங்களது பேச்சு திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. எனவே இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

தமிழ்நாடு அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்துதான் நாங்கள் இதை கொண்டுவந்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் இவற்றை பேச ஏன் அனுமதிப்பதில்லை? ஆளும் கட்சியினரின் உத்தரவுப்படி சபாநாயகர் செயல்படுகிறார். இதற்கு மேலும் அவருக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தின்படி தான் செயல்படுகிறார். அதனால்தான் நடுநிலையோடு செயல்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. கருப்பு சட்டை அணிந்து வந்ததற்கான காரணமும் இதுதான்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் அச்சத்தோடு வாழ்கின்ற சூழ்நிலை தமிழகத்திலே நிலவுகிறது. போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் கண்டித்து நாங்கள் கருப்பு சட்டை அணிந்து வெளிநடப்பு செய்தோம்.

ஒரு பத்திரிகையில், 'சென்னையை போதை இல்லா மாநகராக உருவாக்குவோம்'' என்று வந்த செய்தியில், அதுதொடர்பாக 1,858 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து எந்த அளவுக்கு போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. இதுபற்றி நான் அடிக்கடி பேசியிருக்கிறேன். போதை பொருள் மாநிலமாக மாறிவிட்டால், இளைஞர்களின் வாழ்வே சீரழிந்துவிடும். அவர்களின் எதிர்காலமே நாசமாகிவிடும். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான், இந்த அரசின் கவனத்திற்கொண்டு செல்வதற்காக நேரமில்லா நேரத்தில் இந்த பிரச்சினையை கொண்டுவந்தோம்.

நாங்கள் மக்கள் பிரச்சினை பற்றி பேசவில்லை என்று சபாநாயகர் கூறுகிறார். இது மக்களின் பிரச்சினை இல்லையா? தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பேசுகிறோம்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை சம்மந்தமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நடுநிலையோடு செயல்படுகிறேன் என்று சபாநாயகர் சொல்கிறார். ஆனால் நடுநிலையோடு செயல்படுகிறவராக இல்லை. இது சம்மந்தமாக ஏற்கனவே அ.தி.மு.க. கொறடா வேலுமணி, சபாநாயகர் அலுவலகத்திற்கு சென்று அவரிடத்தில் தெரிவித்துவிட்டார். ஆனால் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த இருக்கை தொடர்பாக அ.தி.மு.க.விற்கு சபாநாயகர் நெருக்கடி கொடுப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு அவர் என்ன நெருக்கடி கொடுக்க முடியும்? இது சம்பந்தமாக தொடர்ந்து எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார். இது வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டமன்றத்தில் எங்களை பணியாற்றவிடாமல் செய்கின்ற வேலையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்