சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மோதல்-காரசார வாக்குவாதத்தால் பரபரப்பு

சிறந்த மாநகராட்சி விருது பெற்றதற்கு யார் காரணம்? என்பதில் தி.மு.க, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.

Update: 2022-08-26 22:05 GMT

மாநகராட்சி கூட்டம்

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ராமச்சந்திரன் சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இந்த விருது பெற உறுதுணையாக இருந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் (அ.தி.மு.க.) யாதவமூர்த்தி மாநகராட்சி கூட்டம் தொடங்கியதும் முதலில் மேயர் திருக்குறள் வாசித்த பிறகு அவசர தீர்மானங்கள் இருந்தால் அதை ஆளுங்கட்சி தலைவர் வாசிப்பார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும். இது மரபு. எனவே மாநகராட்சி கூட்டத்தை முறையாக நடத்தி எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட பணிகள் தற்போது நிறுத்தப்படுகிறது. எனவே டெண்டர் விடப்பட்ட பணிகளை நிறுத்த காரணம் என்ன?. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பணிகள் நிறுத்தப்படுவதை கண்டிக்கிறேன்.

ஆய்வு நடத்த வேண்டும்

எனவே பாகுபாடு இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் மேயர் மற்றும் ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும். மேலும் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள சிறிய மரங்கள் வெட்ட எவ்வளவு ெதாகைக்கு ஏலம் விடப்பட்டது. ஏன் என்றால் விலையுயர்ந்த மரங்கள் வெட்டப்படுகிறது. இதனால் முறைகேடு நடைபெற வழி வகை ஏற்பட்டு உள்ளது.

பனமரத்துப்பட்டி ஏரியில் மரங்கள் வெட்டுவதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். மேலும் கட்சி வேறுபாடின்றி வார்டு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சிறந்த விருது

தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசும் போது, மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் சாலைகளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க அதிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மேயர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து வார்டுகளையும் சமமாக கருதி பணிகள் நடக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, கொறடா செல்வராஜ் ஆகியோர் சேலம் மாநகராட்சிக்கு சிறந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் இந்த விருது கிடைக்க முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பங்களிப்பு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் தான் இந்த விருது கிடைத்தது என்று கூறினர்.

கடும் வாக்குவாதம்

அப்போது தி.மு.க. கவுன்சிலர் சாந்தமூர்த்தி எழுந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி வருவதால் தான் சிறந்த மாநகராட்சிக்கான விருது கிடைத்தது என்றார். தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், குமரவேல், பன்னீர்செல்வம் உள்பட தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் பேசும் போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த முடியாத நிலை இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் தான் விருது கிடைத்தது என்றனர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் மூலம் தான் விருது கிடைத்தது என்று கூறினர்.

இதனால் சிறந்த மாநகராட்சி விருது பெற்றதற்கு யார் காரணம்? என்பதில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

கவுன்சிலர் தர்ணா போராட்டம்

இந்த மோதலுக்கு நடுவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 44-வது வார்டு கவுன்சிலர் இமயவர்மன் திடீரென எழுந்து, பொதுமக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு அளிக்குமாறு கூறி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் 44-வது வார்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடர்பாக 3 முறை தீர்மானம் கொண்டு வந்தும் இதுவரை செயல்படுத்தவில்லை. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாநகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். அதற்கு மேயர் ராமச்சந்திரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்