மோட்டார் சைக்கிளை பயன்படுத்துவதில் தகராறு: தொழிலாளிக்கு சூடு வைத்து சித்ரவதை; மைக்செட் உரிமையாளர் கைது
மோட்டார் சைக்கிளை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்ததாக மைக்செட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதனால் மேட்டூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர்,
மைக்செட் தொழிலாளி
மேட்டூர் புதுச்சாம்பள்ளி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 27), டிரைவர். இவர், கொம்பூரான் காடு பகுதியை சேர்ந்த மைக் செட் உரிமையாளர் சக்திவேலிடம் வேலை பார்த்து வந்தார். ேவலை தொடர்பாக வெளி இடங்களுக்கு சென்று வர கிருஷ்ணமூர்த்திக்கு, சக்திவேல் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை சக்திவேலுவும் பயன்படுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். கிருஷ்ணமூர்த்தியும், தன்னுடைய முதலாளிதானே அழைக்கிறார் என கடைக்கு வந்துள்ளார்.
சூடு வைத்து சித்ரவதை
உடனே சக்திவேல், கிருஷ்ணமூர்த்தியை கடைக்குள் அழைத்து சென்று கை, கால்களை கட்டி போட்டுள்ளார். அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்துள்ளார். மேலும் வயர்களை பற்ற வைக்க பயன்படும் சால்டரிங் கருவியை கொண்டு கிருஷ்ணமூர்த்தியின் கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
மேலும் தன்னிடம் இனியும் தகராறு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தியை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். வீடு திரும்பிய அவர், நடந்த விவரங்களை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது
இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மைக்செட் உரிமையாளர் சக்திவேலை போலீசார் கைது செய்து மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய சம்பவம் மேட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.