பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கடலூர் ஆல்பேட்டை பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update: 2023-08-05 18:45 GMT

கடலூர்

பச்சைவாழியம்மன் கோவில்

கடலூர் ஆல்பேட்டை கன்னியக்கோவிலில் பச்சைவாழியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 27-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மேலும் தினசரி இரவு எலி, மயில், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி அளவில் சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

தீ மிதித்து நேர்த்திக்கடன்

இதையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இருந்து அக்னி கரகம், புஷ்ப கரகம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் அருகில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்