ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2023-06-17 18:45 GMT

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், பரிகாரத் தலங்களில் மிக முக்கிய தலமாகவும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகின்றது.

ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் ராேமசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்தால், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்று நம்பப்படுகின்றது.

இந்த நிலையில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் திதி தர்ப்பண பூஜை செய்தனர்.

இதை தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் பக்தர்கள் புனித நீராடினார்கள். அதன் பின்னர் கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.

இதே போல் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவில் மற்றும் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலிலும் ஆனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்