மார்கழி மாத பிறப்பையொட்டி சிவன், பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மார்கழி மாத பிறப்பையொட்டி சிவன், பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வீதிகளில் சிறுவர்கள் பஜனை பாடல்கள் பாடிச் சென்றனர்.

Update: 2022-12-16 20:28 GMT

மார்கழி மாத பிறப்பையொட்டி சிவன், பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வீதிகளில் சிறுவர்கள் பஜனை பாடல்கள் பாடிச் சென்றனர்.

சிறப்பு பூஜை

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் கிருஷ்ணர் கூறியிருந்தார். ஆன்மிகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் மார்கழி மாதமாகும். அப்படி சிறப்புமிக்க மார்கழி மாதம் பிறந்ததையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் பஜனை ஊர்வலங்கள் தொடங்கியது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில், கரியமாணிக்க பெருமாள் கோவில், சந்திப்பு சாலைகுமார சுவாமி கோவில், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில்களில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோவிலில் அதிகாலை 4.15 மணிக்கு கோபூஜையுடன் விஸ்வரூப தரிசனமும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும் நடந்தது. 4-30 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

சிறுவர்கள் பஜனை

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், 11.30 மணிக்கு உச்சி கால பூஜையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

தச்சநல்லூர் தேனீர்குளம் நவநீத கிருஷ்ணன் கோவில், தளவாய்புரம் பெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள பஜனை மடங்களில் இருந்து சிறுவர்கள் அதிகாலையிலேயே திருவீதிகளில் பஜனை பாடி சென்றனர். பக்தர்கள் திருவெம்பாவை மற்றும் பக்தி பாடல்கள் பாடியவாறு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்