பாரா ஒலிம்பிக் போட்டி: வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-25 05:52 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மணிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் 2023-24-ம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டித் தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்