பயணித்தவர்கள் முழுவிவரம் கிடைக்கவில்லை- தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி

சம்பவம் நடந்த பெட்டியில் பயணித்தவர்கள் முழுவிவரம் கிடைக்கவில்லை என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் கூறினார்.

Update: 2023-08-26 20:30 GMT


சம்பவம் நடந்த பெட்டியில் பயணித்தவர்கள் முழுவிவரம் கிடைக்கவில்லை என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் கூறினார்.

சட்டவிரோதமாக சிலிண்டர்

மதுரை ரெயில் நிலையத்தில் 9 பேர் பலியான சம்பவம் நடந்த பகுதியை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பார்வையிட்டார். பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சம்பவம், சட்டவிரோதமாக விதிகளை மீறி கொண்டு வரப்பட்ட கியாஸ் சிலிண்டரால் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக இந்த பெட்டி மட்டும் தனியாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் துயரமானதாகும்.

லக்னோவில் ரெயில் பெட்டியில் ஏறும் போது சோதனை செய்திருக்க வேண்டும். சட்டவிரோதமாக விதிகளை மீறி இது போன்ற பொருள்களை எடுத்து செல்லக்கூடாது என்று டூரிஸ்டு உரிமையாளரிடம் கோர்ட்டில் செல்லத்தக்க உறுதிமொழிப்படிவம் வாங்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி சிலிண்டர் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.10 லட்சம் நிதி உதவி

அத்துடன் ரெயில்வே விதிகள் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கவும், ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியானது நடுவழியில் எங்கும் சோதனை செய்யப்படவில்லை. எத்தனை பயணிகள் அந்த பெட்டியில் பயணம் செய்துள்ளனர் என்பது குறித்த முழு விவரங்களும் கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே பொது மேலாளருடன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்