ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

Update: 2022-09-28 16:55 GMT


ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

உத்தரவு

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடைவிதித்து உள்ளது.

இந்த தடையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை எதிரொலியாக போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராமநாதபுரம் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:- சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

முக்கிய இடங்களான பாம்பன் பாலம், ரெயில் பாலம், ரெயில்நிலையங்கள், பஸ்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டு உள்ளது.

கைது

முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எந்த அமைப்பினரும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், போராட்டம் போன்றவை நடத்த அனுமதி கிடையாது. அதனை மீறி செயல்பட்டால் கைது செய்யப்படுவார்கள். மாவட்டம் முழுவதும் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்