தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்
பணியை விரைந்து முடிக்க வேண்டும்
கரூர் மாவட்டம் புங்கோடையிலிருந்து குந்தாணிபாளையம், நத்தமேடு வரை அமைக்கப்பட்டு இருந்த தார் சாலை மிகவும் சிதிலமடைந்து வானங்கள் செல்ல முடியாதபடி இருந்தது. இந்த நிலையில் தார்சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புங்கோடை.
சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரத்தில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணற்று நீரை அங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து குழாய் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தென்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு மிக குறைந்த அளவே குடிநீர் கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் தேவைக்கு குடிநீரை பிடித்து கொண்டு குடிநீர் குழாயை அடைத்து விடாமல் மரம், செடி கொடிகளுக்கு தண்ணீர் விடுவதே ஆகும். தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் தெற்கு பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு குறைந்த அளவு கிடைத்து வந்த குடிநீரும் சரிவர கிடைக்காமல் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செல்லாண்டிபுரம்.
பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், புலியூர் கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊராகும். பேரூராட்சியின் தலைமை இடமாக அமைந்துள்ள இந்த ஊரின் வழியாக தினந்தோறும் அரசு, தனியார் பஸ்கள் என அதிகப்படியான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இங்கு அதிக அளவில் பயணிகள் காத்திருந்து தங்கள் பகுதிக்கு பஸ்களில் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் பஸ் பயணிகள் நிழற் குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் என பலருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அதிக அளவில் பயணிகள் அமர்ந்து இருக்கக்கூடிய வகையில் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், புலியூர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிப்பு
கரூர் மாவட்டம், நெரூர், மல்லம்பாளையம் ஆகிய காவிரி ஆற்றிலிருந்து மணல் கொண்டு வரப்பட்டு வாங்கல் உட்பட்ட நாவல் நகரில் இருப்பு வைக்கப்படுகிறது. இங்கு இருந்து பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் செல்லும் போது மேலே தார்ப்பாய் போடாமல் கொண்டு செல்வதால், சேலம், மதுரை ஆகிய தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது மணல்காற்றில் பறக்கின்றது. இதனால் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் பட்டு அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மித்திரன் ராதா, மண்மங்கலம்.