தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-09 18:59 GMT

சாலையின் குறுக்கே பள்ளம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் பாலத்துறை உள்ளது. இதன் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. புகழூர் வாய்க்கால் பாலத்திற்கு அருகே உள்ள வெற்றிலை கடைக்கு எதிரே தார் சாலையின் குறுக்கே குழாய் போடப்பட்டது. அதிக வாகனங்கள் இந்த தார் சாலை வழியாக செல்வதால் குழாய் போடப்பட்ட பகுதியின்மேலே சிறியதாக நெடுகிலும் பள்ளம் ஏற்பட்டது. தற்போது அந்த பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இரவு நேரத்தில் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராம்கி, வேலாயுதம்பாளையம்.

நிறுத்தப்பட்ட பஸ்களால் பயணிகள் அவதி

பரமத்தி வேலூரில் இருந்து நொய்யல் வழியாக கொடுமுடி, ஈரோடு, கோவை, திருப்பூர், பல்லடம், வெள்ளகோவில், பழனி, பரமத்தி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு ஏராளமான பஸ்கள் வந்து சென்று கொண்டிருந்தன. கொரோனா காலத்தில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழக அரசு பஸ்களை இயக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது அரசு பஸ்கள் மிகவும் குறைந்த அளவிலும், தனியார் பஸ்கள் ஒரு சில மட்டும் தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு இந்த வழியாக பஸ்கள் செல்லாததால் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ் மூலம் பயணம் செய்யும் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரியிடம் இது குறித்து பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திலகவதி, நொய்யல்.

மின்மாற்றியில் படரும் செடி-கொடிகள்

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கணேசபுரம் கிழக்கு பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கவும், குடிநீர் தொட்டிகளுக்கு மின் மோட்டார்களை இயக்கவும் அந்த பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. பச்சை செடிகள் இந்த மின்மாற்றியில் படர்ந்து மின் கம்பிகளை உரசும் நிலையில் உள்ளது. இதனால் அந்த செடி, கொடிகள் வழியாக மின்சாரம் பாய்ந்து அதை மிதிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது. மேலும் இந்த செடி, கொடிகளால் மின்மாற்றியில் பழுது ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கணேசபுரம்.

வெளியே நடமாட மக்கள் அச்சம்

கரூர் தான்தோன்றிமலை கணபதிபாளையத்துக்கு உட்பட்ட அன்புநகர் பகுதியில் காலியிடங்களில் தேவையில்லாத கற்கள், குப்பைகள் போட்டு வைத்துள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் அதிலிருந்து பாம்புகள், தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளன. சிறுவர்கள் வெளியில் சென்று விளையாட முடியவில்லை. இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன சக்கரங்களில் இந்த விஷ ஜந்துக்கள் சிக்கிக் கொள்கிறது. எனவே இப்பகுதியில் உள்ள தேவையற்ற கற்கள், புதர்களை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், அன்பு நகர்.

சீரமைக்கப்படாத மண் சாலை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள புகழூரில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில், சரக்கு ரெயில்கள் செல்லும்போது இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். கேட் மூடப்பட்ட நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மண் சாலை போடப்பட்டிருந்தது. அந்த மண்சாலை மழையின் காரணமாக மிகவும் குண்டும், குழியுமாக இருந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மண்சாலையை சீரமைத்தனர். ஆனால் தற்போது அந்த மண் சாலை வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அதிக இடங்களில் நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமாக உள்ள மண் சாலையை சீரமைத்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், புன்னம்சத்திரம்.

Tags:    

மேலும் செய்திகள்