மதுரையில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 22:06 GMT

திருப்பரங்குன்றம்,

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து

திருப்பரங்குன்றம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயா.இளங்கோவன், திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 23 பெண்கள் உள்பட 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

டி.கல்லுப்பட்டி

இதேபோல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலையின்மையை போக்கிட வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்திட வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக டி.கல்லுப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமையில் 18 பெண்கள் உள்பட 128 பேரை கல்லுப்பட்டி போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

உசிலம்பட்டி

இதேபோல் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி தபால் அலுவலகம் முன்பு உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் முத்துராணி, முருகன், மாவட்ட குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமர் ஆகியோர் தலைமை தாங்கினர் தொடர்ந்து தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 300-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு கட்சியினரை உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்