வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை, நாகை கோவில் சிலைகளை அந்தந்த கோவில்களில் ஒப்படைக்க வேண்டும்- கும்பகோணம் கோர்ட்டு உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை, நாகை கோவில் சிலைகளை அந்தந்த கோவில்களில் ஒப்படைக்க வேண்டும் என கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-06-08 18:36 GMT

கும்பகோணம்:-

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை, நாகை கோவில் சிலைகளை அந்தந்த கோவில்களில் ஒப்படைக்க வேண்டும் என கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

வெளிநாடுகளுக்கு சிலை கடத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இருந்து பழமையான சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் பல சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து 8 உலோக சாமி சிலைகள், 2 கற்சிலைகள் என 10 சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.

சிலைகளை கேட்டு மனு

இந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக கடந்த 3-ந் தேதி சென்னை கொண்டு வந்தனர். பின்னர் அந்த சிலைகள் கடந்த 6-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

அப்போது சிலைகளுடன் தொடர்புடைய கோவில் அதிகாரிகள் சிலைகளை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

கோவில்களில் ஒப்படைக்க உத்தரவு

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட தஞ்சை அருகே புன்னைநல்லூரில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நடராஜர் சிலை, தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரத்தில் உள்ள வான்மீகிநாதர் கோவிலுக்கு சொந்தமான சிவன்-பார்வதி சிலை, நாகை சாயாவனேஸ்வரர் கோவில் குழந்தை சம்பந்தர் சிலை ஆகிய 3 சிலைகளை அந்தந்த கோவில்களின் நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க கும்பகோணம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெய்ந்த்முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் இன்று(வியாழக்கிழமை) சிலைகள் ஒப்படைக்கப்பட உள்ளன. மீதம் உள்ள சிலைகள் தொடர்பான வழக்கு விசாரணை நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்