கஞ்சா பொட்டலங்களை வீடு வீடாக டோர் டெலிவரி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள்...!

திண்டுக்கல் அருகே கஞ்சா பொட்டலங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்த கூரியர் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-19 15:47 GMT

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலை கொட்டபட்டி பிரிவு அருகே தனியார் அலுவலகத்தில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஐ.ஜி.தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தை சோதனை செய்தபோது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலங்கள் போட்டுக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மவுன்ஸ்புரத்தை சேர்ந்த லோக மணிகண்டன்(வயது 25), நத்தத்தை சேர்ந்த செல்வமருதநாயகம் (25) என்பதும், இவர்கள் தனியார் கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விஜயகுரு (30), தீபக்(21), இசக்கிபாண்டி (20) ஆகிய 3 பேரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி அதை பொட்டலங்கள் போட்டு வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து விஜயகுரு, தீபக், இசக்கிபாண்டி ஆகிய 3 பேரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்