கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல திடீர் தடை

சிவகாசி மாநகராட்சி கூட்ட அரங்கிற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-01-31 19:05 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சி கூட்ட அரங்கிற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

சிவகாசி மாநகராட்சியின் கூட்டம் பல்வேறு காரணங்களால் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று ஜனவரி மாத கூட்டம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மாநகராட்சி கூட்டத்தில் பிரச்சினை எழலாம் என்ற தகவலை தொடர்ந்து சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் சுபகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மாநகராட்சி அலுவலகத்துக்குள் செல்பவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக கவுன்சிலர்கள் மாநராட்சி கூட்ட அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று போலீசார், அதிகாரிகள் திடீர் தடை விதித்தனர்.

எதிர்ப்பு

கூட்ட அரங்கிற்குள் கவுன்சிலர்கள் செல்ல முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று அறிவுறுத்தினர். மாநகராட்சி ஊழியர்களிடம் செல்போன் கொடுத்து செல்லும் படி கூறினர்.

இதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். ஆனால் கவுன்சிலர்கள் தங்களது செல்போன்களை வாகனங்களில் வைத்துவிட்டு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீர்மானங்கள்

அதன் பின்னர் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய 141 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அதன் பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மேயர் சங்கீதா இன்பத்திடம் மனு கொடுத்தனர். இதில் கவுன்சிலர் கரைமுருகன் புதிய சாலைகளுக்கு பெயர் வைக்கும்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் தர்மர், பிரபல டாக்டர் கிரகம் ஆகியோரின் பெயர்களை வைக்க வேண்டும் என கோரினார். 

Tags:    

மேலும் செய்திகள்