58,912 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சேலம் மாவட்டத்தில் நடந்த 35-வது மெகா முகாமில் 58,912 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-09-04 20:16 GMT

சேலம் மாவட்டத்தில் நடந்த 35-வது மெகா முகாமில் 58,912 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

சிறப்பு மெகா முகாம்

சேலம் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 29 லட்சத்து 18 ஆயிரத்து 99 பேருக்கு முதல் தவணையும், 26 லட்சத்து 76 ஆயிரத்து 707 பேருக்கு இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தமிழக அரசின் உத்தரவுப்படி இதுவரை 34 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டத்தில் நேற்று 35-வது சிறப்பு மெகா முகாம் நடைபெற்றது.

ஊரகப்பகுதியில் 2,315 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் பொதுமக்கள் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மொத்தம் சுமார் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

58,912 பேருக்கு தடுப்பூசி

இந்தநிலையில் நேற்று நடந்த 35-வது சிறப்பு மெகா முகாமில், சேலம் புறநகரில் 39 ஆயிரத்து 85 பேருக்கும், சேலம் மாநகராட்சி பகுதியில் 7 ஆயிரத்து 265 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 12 ஆயிரத்து 562 பேருக்கும் என மொத்தம் 58 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்