காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்

கொள்ளிடம் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-09-11 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவிழாவில் தகராறு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் உள்ள காந்திநகரில் கன்னிக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. திருவிழாவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தபோது கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் வடகால் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரண்டு ஊர்களை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார் இதுகுறித்து கலந்து பேசி இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருந்தபோதும் சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடவாசல் கடைத்தெரு பகுதியில் இந்த இருதரப்பினர் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மண்வெட்டி, இரும்பு பைப்பு போன்றவற்றால் தாக்கி கொண்டனர். இதில் கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்த நரேஷ் (வயது 25), ராஜா(32),பாக்கியராஜ்(22), ராஜராஜன்(32) ஆகியோருக்கும், வடகால் ஆற்றங்கரை தெருவைசேர்ந்த மணிகண்டன்(23), விக்னேஷ்(25), மதன்ராஜ்(22) ஆகியோருக்கும் தலை,கை பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

மேலும் காயம் அடைந்த மணிகண்டன், பாக்கியராஜ், ராஜராஜன் ஆகிய மூவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வடகால் ஆற்றங்கரை தெருவைசேர்ந்த மணிமாறன்(21),விக்னேஷ் (25), ராஜராஜன்(32) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

இந்த பிரச்சனை சம்பந்தமாக இருதரப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடவாசல் மற்றும் வடகால் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்