போலீஸ் அதிகாரிகளை கண்டித்துபள்ளி மாணவி தீக்குளிக்க முயற்சி:கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளை கண்டித்து பள்ளி மாணவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-27 18:45 GMT

தீக்குளிக்க முயற்சி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, தேனி பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் நேற்று தனது தாயாருடன் வந்தார். அவர் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவர் ஒரு கேனில் எடுத்து வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கிருந்த போலீசார் அந்த மாணவியை தடுத்து நிறுத்தினர். அப்போது பொய்யான புகாரின் பேரில் தங்களின் குடும்பத்தினர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சி செய்து சிகிச்சை பெற்றதாகவும் அந்த மாணவி போலீசாரிடம் கூறினார்.

பாலியல் தொல்லை

மேலும் அந்த மாணவி கலெக்டரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்த மனுவில், இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையில் போலீஸ் அதிகாரிகள் சிலர் தன்னை மிரட்டியதாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்