புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனவிபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளிராஜ், சிவகங்கை.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்கலாபட்டி ஊராட்சி கீழநிலை கிராமத்தில் உள்ள குளத்தில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. கருவேல மரங்களால் குளத்தின் நீர் வளம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ்குமார், திருப்பத்தூர்.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், சிவகங்கை.
பொதுமக்கள் அச்சம்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வானங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.புதூர்.
ஊருணி தூர்வாரப்படுமா?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளை ஊருணி பல வருடங்களாக தூர்வாராமல் உள்ளது. இந்த ஊருணியில் ஆகாயத்தாமரைகள், கரையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஊருணியில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பு, தேவகோட்டை.