கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பவள விழாவையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி வருகிற 10-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது.

Update: 2023-03-03 18:45 GMT


சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பவள விழாவையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி வருகிற 10-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது.

பவள விழா

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் துரையரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி கடந்த 1947-ம் ஆண்டு சிவகங்கை மன்னர் சண்முகராஜாவால் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி கடந்த 1981-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் தமிழக அரசால் ஏற்கப்பட்டு தற்போது மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி என்னும் பெயரில் இரு பாலர் பயிலும் அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் 12 இளநிலை பாடப்பிரிவும், 11 முதுநிலை பாடப்பிரிவும் உள்ளது. இவற்றில் 11 பாடப் பிரிவுகள் முனைவர் பட்ட ஆய்வு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பவள விழா கொண்டாடப்பட உள்ளது.

போட்டிகள்

இதையொட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கவிதை போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு வழங்கப்படும். இந்த போட்டியில் 20 முதல் 30 வரிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் புதுக்கவிதை எழுத வேண்டும்.

இதேபோல கட்டுரை போட்டிக்கான தலைப்பு தமிழர்களின் தாய்மடி கீழடி என்பதாகும். இதில் 5 முதல் 7 பக்கங்களுக்குள் கட்டுரை எழுத வேண்டும். பேச்சுப்போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு கொடுக்கப்படும். இதில் 5 நிமிடங்கள் வரை பேச வேண்டும்.

மாணவ, மாணவிகள்

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் கல்லூரி முதல்வரின் சான்றொப்பமிட்ட கடிதத்துடன் போட்டி நாளன்று வருகை தந்து போட்டியில் கலந்து பயன்பெறலாம். இந்த போட்டிகளில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் போட்டி ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை உதவி பேராசிரியர் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்