விவசாயிகளுக்கு ரூ.132 கோடி இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை

மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு ரூ.132 கோடி இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-03-20 18:45 GMT

மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு ரூ.132 கோடி இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயிர்கள் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு 2022-23-ம் ஆண்டில் சம்பா பருவத்தில் 1,35,859 எக்டர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. 2022-ல் வடகிழக்கு பருவ மழை குறைவாக பெய்ததால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோள பயிர்கள் பாதிப்பு அடைந்தன. அவ்வாறு பாதிப்பு அடைந்த பரப்பினை வருவாய் துறையினர் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் கூட்டாக கள ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு செய்தனர்.

கூட்டாய்வின் மூலம் கணக்கெடுப்பு செய்ததில் நெல்பயிர் 98,314 எக்டரும், மக்காச்சோள பயிர் 40.58 எக்டரும் பாதிப்பு அடைந்துள்ளதாக அறிக்கை பெறப்பட்டு, அதற்குரிய இழப்பீட்டு தொகை ரூ.132.71 கோடி பேரிடர் மேலாண்மை நிதி கோரி அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

நிவாரண தொகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 3-ந் தேதி நில நிர்வாக ஆணையர், 5-ந் தேதி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், 10-ந் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வறட்சி நிவாரண தொகையினை விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்