இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி நகரில் புதிதாக பத்திர பதிவு அலுவலகத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு நகர செயலாளர் அஜய்குமார்கோஷ் தலைமை தாங்கினார். நகர நிர்வாக குழு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செங்கோடன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வரதராஜன், இணை பொதுச்செயலாளர் முபாரக் அலி ஆகியோர் பேசினர். போராட்டத்தில் அறந்தாங்கி நகரில் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம், நில அளவையர் அலுவலகம், வட்டவழங்கல் அலுவலகம் மற்றும் கருவூலம் ஆகியவைகள் ஒரே வளாகத்தில் தனித்தனி கட்டிடங்களில் செயல்பட்டு வந்தன. தற்போது நீதிமன்றம் எல்.என். புரத்திரத்திலும், காவல் நிலையம் பேராவூரணி சாலையிலும், தாலுகா அலுவலகம் அதே இடத்திலும் புதிய கட்டிடங்கள் கட்டி செயல்படுகின்றன. ஆனால் பத்திரப்பதிவு அலுவலகம் மட்டும் பட்டுக்கோட்டை சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத அறந்தாங்கி புறநகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகம் என்பது பணம் மற்றும் உயிர் ஆகியவற்றிற்கு பாதுகாப்பான இடமாகவும், உடனடியாக காவல்துறையால் பாதுகாக்கக்கூடிய இடமாகவும், அனைத்து மக்களும் வந்து செல்லும் தூரத்திலும் இருக்கவேண்டும். ஆனால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மேற்கண்ட எந்த தகுதியும் இல்லாத இடமாக உள்ளது. எனவே அறந்தாங்கி பத்திரபதிவு அலுவலக புதிய கட்டிடத்தை அறந்தாங்கி நகர் பகுதியிலேயே கட்டவேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.