மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் விவசாயி உயிரிழந்தார்.;
சமயபுரம்:
சிறுகனூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் சிறுகனூர் அன்னை நகரில் உள்ள அவரது வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் இழுப்புடையான் கோவில் தெருவை சேர்ந்த ஞானபிரகாசத்தின் மகன் அந்தோணிசாமி (31) என்பவர், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்த பின்னர் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்தபோது 2 பேரின் மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தமிழ்ச்செல்வன், அந்தோணிசாமி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தமிழ்ச்செல்வன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.